சிவகங்கையில் இருவருக்கு டெங்கு

சிவகங்கை,செப்.9-

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் இருவருக்கு டெங்கு ஒருவருக்கு உண்ணி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் காய்ச்சல் பாதித்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஒருவருக்கு உண்ணி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளம் அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமி கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார். அந்த கிராமத்தில் சுகாதரத் துறையினர் முகாமிட்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்களை பரிசோதித்து அறிவுரை வழங்கினர்.

மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி கூறுகையில், உயிரிழந்த குழந்தைக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. வேறு பாதிப்பு இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். டெங்கு தமிழகம் முழுவதும் இருக்கிறது. டெங்கு தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்களிடம் 20 டீ.பி.சி., பணியாளர்கள் தான் உள்ளனர். கலெக்டரிடம் கூடுதலாக 20 டீ.பி.சி., பணியாளர்கள் கேட்டுள்ளோம். பொதுமக்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டுப் பயன்பாட்டுத் தொட்டிகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும். உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும் என்றார்.    

Advertisement