வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.2,000 அபராதம்: உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சி சார்பில், உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வரும் பொதுமக்கள் உரிமம் பெறும் வகையிலான சிறப்பு முகாம் உழவர்கரை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு 10க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற விண்ணப்பித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட அசோக் நகர் சமுதாய நலக்கூடத்தில் வரும் 12-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, செல்லப்பிராணி வளர்க்கும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, உரிய உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வரும் 31ம் தேதிக்குள் அனைத்துச் செல்லப்பிராணி உரிமையாளர்களும் தங்களது வளர்ப்பு நாய்களுக்குக் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் உரிமம் பெறத் தவறும் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement