கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏஜன்ட் உள்பட 4 பேர் கைது

ஆம்பூர்:ஆம்பூர் அருகே கஞ்சா விற்ற, 3 பேர் மற்றும் கஞ்சா ஏஜன்ட் ஒருவர் என மொத்தம், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் - வேலுார் மாவட்ட எல்லையான மாச்சம்பட்டிலுள்ள சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு, உமராபாத் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு பைக், நிற்காமல் வேகமாக சென்றது.

சந்தேகமடைந்து அந்த பைக்கை விரட்டி மடக்கி பிடித்தனர். விசாரணையில், பைக்கில் சென்றவர்கள் ஆம்பூர் கஸ்பா சிவராஜபுரத்தை சேர்ந்த சஞ்சீவி, 23, பெருமாள், 25, ஆசை தம்பி, 24, என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில், 40 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவர்கள் வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியை சேர்ந்த கஞ்சா விற்பனை ஏஜன்ட் தனுஷ், 23, என்பவரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, சஞ்சீவி, பெருமாள், ஆசை தம்பி மற்றும் தனுஷ், ஆகிய, 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement