திருப்பூர் மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக இடைத்தேர்தல்
– நமது நிருபர் –: திருப்பூர் மாவட்ட வரலாற்றில், முதன்முறையாக தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. தங்களது செல்வாக்கை தக்கவைக்க, அ.தி.மு.க., – தி.மு.க., – த.வெ.க., வேட்பாளர் களமிறங்குவார்கள் என, மக்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், 2009 பிப்., 22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. மாவட்டம் உதயமான பின், 2009, 2014, 2019, 2024 என, நான்கு லோக்சபா தேர்தல் நடந்துள்ளது; 2011, 2016, 2021, 2026 என நான்கு சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன.
இதுவரை, இடைத்தேர்தல் வந்ததே இல்லை. உள்ளாட்சிகளில் மட்டுமே, சிலமுறை இடைத்தேர்தல் நடந்துள்ளது.
தாராபுரம் (தனி) தொகுதியை, 2011ல், அ.தி.மு.க., வென்றது; 2016ல், காங்கிரஸ், 2021ல் தி.மு.க., வென்றது; தி.மு.க., விடம் இருந்த தாராபுரத்தை, கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கைப்பற்றியது.
வெற்றியடைந்த சத்தியபாமா, நன்றி அறிவிப்புக்கு வராமலேயே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தார். விரைவில், தாராபுரம் தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
அதற்காக, விட்டதை பிடிக்க வேண்டுமென, அ.தி.மு.க.,. வினர் களமிறங்கி, தேர்தல் பணியை துவக்க ஆயத்தமாகிவிட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், ‘திருப்பூர் மாவட்ட வரலாற்றில், முதன்முறையாக இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
தாராபுரத்தில், தி.மு.க.. விடம் இருந்து தொகுதியை கைப்பற்றினோம். இடைத்தேர்தல் வந்தாலும், மீண்டும் கைப்பற்றுவோம். ஏற்கனவே, ஊராட்சி வாரியாக, வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடந்து முடிந்துள்ளது,’ என்றனர்.
தாராபுரம் (தனி) தொகுதியில், கடந்த தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் பெண்களாக இருந்தனர். இடைத்தேர்தலில், ஒவ்வொரு கட்சியும், தங்களது ‘செல்வாக்கை’ நிலைநிறுத்த வரிந்துகட்டி களமிறங்குவார்கள் என்பதால், தாராபுரத்தில், தேர்தல் பரபரப்பு களைகட்டும்.