மழைநீர் வெளியேற தோண்டப்பட்ட பள்ளத்தால் அண்ணனுாரில் அவதி 

ஆவடி: அண்ணனுார், பொன்னியம்மன் கோவில் சாலையில் மழைநீர் வெளியேற தோண்டப்பட்ட பள்ளத்தால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் பொன்னியம்மன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள விளையாட்டு மைதானம், சில வாரமாக பெய்து வரும் மழைநீரில் மூழ்கியுள்ளது.

இந்த மைதானத்தை ஒட்டி, அண்ணனுார் ரயில் நிலைய பணிமனை உள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படும் மழைநீர் கலந்த கருப்பு நிற கழிவு எண்ணெய், ஒரு மாதமாக மைதானத்தில் தேங்கியுள்ளது.

இதனால், பொன்னியம்மன் கோவில் தெருவில் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகரித்து, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரை வெளியேற்ற பொன்னியம்மன் கோவில் சாலையோரம், ஆவடி மாநகராட்சி சார்பில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால், ஒரு மாதமாகியும் குழாய் பதிக்காமல் உள்ளது. சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்ணால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது, அவ்வப்போது பெய்து வரும் மழையால், இச்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண் சகதியுமாக மாறி, பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளம் தோண்டி கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement