ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
மூணாறு: மூணாறு வன உயிரின பிரிவுக்கு கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 54 வகை ஊர்வன, 52 வகை இருவாழ் உயிரினங்கள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது.
மூணாறு வன உயிரின பிரிவுக்கு கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான இரவிகுளம், ஆனமுடிசோலை, பாம்பாடும்சோலை, மதிகெட்டான் சோலை ஆகிய தேசிய பூங்காக்கள், குறிஞ்சி மலை சரணாலயம் ஆகியவற்றில் ஊர்வன, தரை, தண்ணீர் ஆகியவற்றில் வாழும் இருவாழ் உயிரினம் ஆகியவற்றின் கணக்கெடுப்பு செப்.,3ல் துவங்கி செப்.,6 வரை நடந்தது.
அதற்கு மூணாறு வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர்கள் நிசாம், அனில்குமார் தலைமை வகித்தனர். கணக்கெடுப்பில் 54வகை ஊர்வன, 52வகை இருவாழ் உயிரினங்கள் உள்ளதாக தெரியவந்தது.
அவற்றில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள அழிந்து வரும் உயிரினமான ஆனைமுடி இலை தவளை, மஞ்சள் கண் தவளை, புள்ளி பச்சிலை தவளை, சொரியன் பாறை தவளை, சோலை இரவு தவளை, மாவேலி தவளை உள்பட 36 வகை தவளைகள் கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப் பட்டன.
அதேபோல் புல் மண்ணுளி, மெலிந்த வால் பாம்பு, ரூர்க்கி புழு பாம்பு, மலச் சோலை பாம்பு உள்பட 38 வகை ஊர்வன மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுவதாகவும் தெரியவந்தது. இறுதியாக 2022ல் நடந்த கணக்கெடுப்பில் 52 ஊர்வன, 47 இருவாழ் உயிரினங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டது.