மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'

கூடலுார்: மசினகுடி அருகே,குடியிருப்புக்கு அனுமதி பெற்று வணிக ரீதியாக செயல்பட்டு வந்த விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், சிலர் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதனை வணிக ரீதியாக சுற்றுலா விடுதியாக பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஊட்டி, குன்னுார் பகுதியில் பல கட்டடங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மசினகுடி ஆச்சக்கரை பகுதியில், கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் தலைமையில், மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், விதிமீறிய விடுதிக்கு 'சீல்' வைத்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'மசினகுடி பகுதியில் இதுபோன்று, 20 கட்டடங்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது. அவற்றை ஆய்வு செய்து, 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement