கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு

5

- நமது நிருபர் -

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், முதல்வர் விஜய் மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில், காங்கிரஸ் - ம.தி.மு.க., - வி.சி.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில், அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

கூட்டணி அமைத்த பின் நடக்கும், முதல் இடைத்தேர்தல் என்பதால், மக்களிடம் த.வெ.க., அரசின் சாதனையை விளக்கி பேச வேண்டும். அதற்கு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்.

அதில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டும் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். அதை, முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார்.

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஒரே மேடையில் பிரசாரம் செய்வது, அந்த அணியின் ஒற்றுமையை வாக்காளர்களிடம் வெளிப்படுத்தும்.

இந்த பொதுக்கூட்டங்கள், அரசியல் ரீதியாகவும் கவனம் பெறும். முதல்வர் விஜயின் பிரசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பர். அவர் முதல்வரானதும் நம்மை தேடி வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும்.

எனவே, முதல்வர் விஜய், கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு இணைந்து பிரசாரம் செய்வது, இடைத்தேர்தல் வெற்றியை எளிதாக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement