இரு தரப்பு மோதல் விவகாரம் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம்:   விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை தெளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெளி ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனன் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர் நேற்று காலை விழுப்புரம், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, மனு அளிக்கும் படி அனுப்பி வைத்தனர். அப்போது, தெளி கிராமத்தினர் மனு அளித்து கூறியதாவது:

காணை அருகே கடந்த 2ம் தேதி பஸ்ஸில் வந்த, தெளி, சிறுவாக்கூர் மாணவர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு, பிறகு இரு தரப்பு பிரச்னையாக மாறியது.

இது தொடர்பாக, காணை போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிந்தனர். ஆனால், இந்த மோதல் சம்பவங்களில், முழுமையாக போலீசார் விசாரிக்காமல், சிறுவாக்கூர் மக்கள் அளித்த புகார்கள் மீது, உரிய விசாரணையின்றி, ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கில் சம்மந்தமில்லாமல் பலரை இணைத்து, வழக்கு பதிந்துள்ளனர்.

இரு தரப்பு மாணவர்கள் மோதல் விவகாரத்தில், தொடர்ந்து நடந்த முழு சம்பவங்களையும், தனித்தனியாக விசாரிக்காமல், ஒரு தரப்பினர் மீது மட்டும், பாரபட்சமாக நடவடிக்கை எடுத்து, கைது செய்துள்ளனர்.

இதனால், காவல் உயர் அதிகாரிகள் தலைமையில், முழுமையாக விசாரணை நடத்தி, சாட்சியங்களை பதிவு செய்து, சட்டப்படியும், நடுநிலையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்ற அதிகாரிகள், எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement