நீலகிரியில் அதிகரித்த விதிமீறிய கட்டுமானங்களுக்கு...கிடுக்கிபிடி!: ஐகோர்ட் உத்தரவின் படி, 943 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்'
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், விதிமீறிய கட்டுமானங்கள் அதிகரித்த நிலையில், ஐகோர்ட் உத்தரவின் கீழ் இதுவரை, 943 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.
தென்னகத்தின் நீர் தொட்டியான, நீலகிரி மலை பகுதிகளை அழித்து கட்டட காடுகளாக மாற்றி வருவதால் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. இயற்கை பாதுகாப்புக்கு பல கட்டுப்பாடுகளை அரசு வகுத்த போதும், விதிமீறிய கட்டடங்கள் குறைந்தபாடில்லை.
மாஸ்டர் பிளான் அமல் இந்நிலையில், பேரிடர் அபாய சூழலை தடுக்க, 1993-ல் அமலுக்கு வந்த மாஸ்டர்பிளான் சட்டத்தின்படி, 'கட்டடங்களின் உயரம் தரை மட்டத்திலிருந்து அதிகபட்சம், 7 மீட்டருக்குள் மட்டுமே இருப்பது; சரிவான கூரைகள் மட்டுமே அமைப்பது; 1:3 சரிவுக்கு மேல் உள்ள நிலங்களில் கட்டடங்கள் கட்ட கூடாது; உள்ளாட்சி அமைப்புகளுடன், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (ஹாகா) மற்றும் கட்டடக்கலை பாதுகாப்பு குழு (டிரிபிள்-ஏ) ஒப்புதல்களை பெறுவது கட்டாயம்,' என்ற விதிகளை பின்பற்ற வேண்டும்.
விதிகளை மதிக்காமல் கட்டுமானம் ஆனால், அரசின் விதிகளை மதிக்காமல், அரசியல்வாதிகள்; உயர் அதிகாரிகளின்; உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளின் ஆதரவின் பேரில், பணம் படைத்தவர்கள் கட்டடங்களை கட்டுவது தொடர்கிறது. விதிகளை மதிக்காமல் கட்டப்பட்டு வரும் கட்டங்களை துவக்கத்தில் ஆய்வு செய்து தடுக்காமல், உள்ளாட்சி அமைப்பில் உள்ள சில அதிகாரிகள், சில உள்ளாட்சி பிரதிநிதிகள் லஞ்சம் வாங்கி விதிமீறல் கட்டடங்களை கட்ட காரணமாக இருந்துள்ளனர். எளிய மக்கள் சிறிய வீடுகளுக்கு விதிகளை கூறி இழுத்தடிக்கும் நிர்வாக அமைப்புகள், விவசாய நிலங்களில் உருவான சுற்றுலா விடுதிகளை கட்ட துணை நிற்கின்றனர்.
'ஹோம்ஸ்டே' விடுதிகளை மூட உத்தரவு சமீபத்தில், முறையான கட்டட உரிமம் மற்றும் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை (ஹோம்ஸ்டே) உடனடியாக மூடி 'சீல்' வைக்க, சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது.
இதன்படி, மாவட்டத்தில், 943 விதிமீறிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, 79 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், நோட்டீஸ் விடப்பட்ட கட்டடங்களில், 64 நிறுவனங்கள் வணிக அனுமதி பெற்றவை.
58 பாரம்பரிய கட்டடங்கள்; 62 நிறுவனங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியது; 32 நிறுவனங்கள் நோட்டீசை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன.
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''மாவட்டத்தில், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட, 900க்கும் மேற்பட்ட கட்டடங்கள் குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இத்தகைய கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் வைத்துள்ளவர்கள் அதனை கொண்டுவரும் பட்சத்தில் விலக்கு அளிக்கப்படும்.
இல்லாத பட்சத்தில் விதிமீறிய கட்டடங்கள் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு