இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி 'சரிகம' நிறுவனம் வழக்கு

- சிறப்பு நிருபர் -

'நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறி வரும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதை விற்பனை செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்' எனக்கோரி, 'சரிகம' நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இளையராஜா இசையமைத்த சில திரைப்பட பாடல்களுக்கான உரிமைக்கு, 'சரிகம' நிறுவனம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக இளையராஜாவுக்கும், 'சரிகம' நிறுவனத்திற்கும் இடையே டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த பிப்., 13ல், சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டில்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதில், 'சரிகம நிறுவனம் காப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜாவோ அல்லது அவரது பிரதிநிதிகளோ பயன்படுத்தக் கூடாது' எனக்கூறி, இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி, இளையராஜா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை 1ல் டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இளையராஜா நீதிமன்ற உத்தரவை பகிரங்கமாக மீறி விட்டதாக கூறி, அவருக்கு எதிராக சரிகம நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இசை பிரியர்களுக்கான, 'ஸ்பாட்டிபை, யுடியூப்' போன்ற டிஜிட்டல் தளங்களில் எங்கள் வசம் காப்புரிமை உள்ள பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. ஆனால், அந்த பாடல்களின் காப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி, ஒலிபரப்புக்கு இளையராஜா ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்.

இதன் மூலம், நீதிமன்ற உத்தரவை அவர் வெளிப்படையாக மீறியுள்ளார். மேலும் 'முரட்டுக் காளை' என்ற தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடலின் உரிமை தமக்குரியது என கூறி, அதை பயன்படுத்த தம்மிடம் உரிமம் அல்லது ஒப்புதல் பெற வேண்டும் என வலியுறுத்தி 'பியாண்ட் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுவும் நீதிமன்றம் விதித்த தடைக்கு முரணானது.

தடையை மீறியதற்காக இளையராஜாவை சிறையில் அடைக்க வேண்டும். அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அந்த சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை எங்கள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்காக பிரத்யேக அதிகாரியையும் நீதிமன்றம் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி அனுாப் ஜெயராம் பம்பானி, சரிகம நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு, இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

Advertisement