அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில்
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 23, 9வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் 23, மோதினர்.
'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த இரு செட்களை 1-6, 3-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 4வது செட்டை 6-1 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் ஏமாற்றிய அல்காரஸ் 6-7 என போராடி கோட்டைவிட்டார்.
நான்கு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் 7-6, 1-6, 3-6, 6-1, 6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு ஷெல்டன் 2வது முறையாக (2023, 2026) முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில், உலகின் 'நம்பர்-12' அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோ 28, 46வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் 22, மோதினர். நான்கு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் டியாபோ 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 என போராடி வெற்றி பெற்றார். இத்தொடரில் 3வது முறையாக (2022, 2024, 2026) அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் ஷெல்டன், டியாபோ மோதுகின்றனர்.
அரையிறுதியில் சபலென்கா: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா 28, 6வது இடத்தில் உள்ள செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா 21, மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய சபலென்கா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். பின், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 'டை பிரேக்கர்' வரை நீடித்தது. இதில் அசத்திய சபலென்கா 7-6 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 22 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய 'நடப்பு சாம்பியன்' சபலென்கா 7-6, 3-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில், உலகின் 'நம்பர்-3' அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 32, 27வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் எம்மா நவரோ 25, மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 3வது முறையாக (2024-26) அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் சபலென்கா, ஜெசிகா பெகுலா மோதுகின்றனர்.
மாயா ஏமாற்றம்
ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, ரஷ்யாவின் அரினா மாலிகினா மோதினர். இதில் ஏமாற்றிய மாயா 3-6, 7-5, 5-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ஆறாவது முறை
காலிறுதியில் அசத்திய பெலாரசின் அரினா சபலென்கா, யு.எஸ்., ஓபனில் தொடர்ச்சியாக 6வது முறையாக (2021-26) அரையிறுதிக்கு முன்னேறினார்.
முற்றுப்புள்ளி
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் அசத்திய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரசின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அல்காரஸ் கூறுகையில், ''மகிழ்ச்சியுடனும், தலை நிமிர்ந்தும் வெளியேறுகிறேன். ஏனெனில் போட்டியில் விளையாடுவது மட்டுமின்றி, எவ்வித காயமின்றி வெளியேறுவது எனது இலக்காக இருந்தது,'' என்றார்.
அகாசி சாதனை சமன்
நடப்பு நுாற்றாண்டில் மூன்று முறை யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஆன்ட்ரி அகாசியுடன் (2002, 2003, 2005) பகிர்ந்து கொண்டார் டியாபோ (2022, 2024, 2026).
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'