பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
பல்லடம்: 'பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பல்லடம், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சை, பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை, சித்தா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருவதால், இது வட்டாரத்தின் தலைமை மருத்துவமனையாக உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பால், பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றை வாங்க மருத்துவமனை வளாகத்தை விட்டு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவமனை வளாகத்திலேயே ஆவின் பாலகம் அமைக்கப்பட்டால், நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் எளிதில் வாங்கிப் பயனடைய முடியும். மேலும், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஆவின் பாலகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரிப்பதுடன், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, ஆவின் நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.