'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 52 பணிகள் நடக்கவில்லை மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

சென்னை: 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,602 கோடி ரூபாயில் முன்மொழியப்பட்ட, 52 பணிகள் நடக்கவில்லை' என, மத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் தேர்வாகின. இத்திட்டத்தில், பல்வேறு பணிகளுக்கு, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் ஒப்புதல் வழங்கியது. இதில் ஏழு நகரங்கள் தணிக்கைக்கு எடுக்கப்பட்டன.

முறையான திட்டமிடல் இல்லாததால், ஒப்புதல் பெற்ற 243 பணிகளில், 52 பணிகள் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 1,602.20 கோடி ரூபாய்.

கைவிடப்பட்டன சென்னையில், 279.03 கோடி ரூபாய் மதிப்பிலான 8 பணிகள்; கோவையில் 249.92 கோடி ரூபாய் மதிப்பிலான 9 பணிகள்; ஈரோட்டில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான மின் சுகாதாரம் சார்ந்த ஒரு பணி; மதுரையில் 236.55 கோடி ரூபாய் மதிப்பிலான 10 பணிகள்; திருநெல்வேலியில் 389.95 கோடி ரூபாய் மதிப்பில் 14 பணிகள்; திருப்பூரில் 196.75 கோடி ரூபாய் மதிப்பில் 10 பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நிறைவேற்றப்படாததால், அரசுக்கு மறைமுக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. சேலத்தில் மட்டுமே, முன்மொழியப்பட்ட 27 பணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

குளறுபடிகள் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திண்டுக்கலில் முன்மொழியப்பட்ட பணிகளில் குளறுபடிகள், குறைபாடுகள் இருந்தன. இதனால், இந்த திட்டத்தில் பயன்பெற, திண்டுக்கல் தேர்வு செய்யப்படவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஒரு பணியை அதற்கான வழிகாட்டுதலின்படி செய்ய வேண்டும். ஆனால், அனுமதி இல்லாமல், நிபந்தனைகளை பின்பற்றாமல், திட்டமிடாத 44 பணிகள், 623.86 கோடி ரூபாயில் நடந்துள்ளன.

அதிகபட்சமாக திருநெல்வேலியில் 314. 62 கோடி ரூபாயில் 15 பணிகள்; சென்னையில் 189.66 கோடி ரூபாயில் 20 பணிகள் நடந்துள்ளன.

திட்டமிடாத பணிகளை, மாநகராட்சிகள் தங்களின் சொந்த நிதியில் செய்திருக்க வேண்டும். ஆனால், தெரிந்தே ஸ்மார்ட் சிட்டி நிதியில், விதிகளை மீறி செய்துஉள்ளன. அதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை, அவசியமில்லாத பகுதிகளில் செய்துள்ளன.

செயல்படவில்லை அதேபோல், 571.53 கோடி ரூபாயில், 47 தகுதி இல்லாத 'பான் சிட்டி' திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு நகரங்களில், 115.92 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, பன்னடுக்கு கார் பார்க்கிங், வணிக வளாகம் ஆகியவற்றில், துணை பணிகள் மேற்கொள்ளப்படாததால், இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மதுரையில் 2.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுற்றுலா தகவல் மையம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயல்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement