2 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் கம்யூ., குழப்பம்

17

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர்களை நேற்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியான த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிப்பதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்பத்தில் இருக்கின்றன.

தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.

இணை செயலர்



இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், தி.மு.க., சார்பில், இரண்டு தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கவுள்ள மதுராந்தகம் தனி தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், தி.மு.க., சட்டத்துறை இணைச் செயலர், வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் தனி தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை



நேற்று காலையில், சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி, பொதுச்செயலர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


அந்த ஆலோசனையை முடித்து, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்த பின், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.


மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன், தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பதவி வகிக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ.,வான அவருக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது இடைத்தேர்தல் வேட்பாளராக பரந்தாமனை அறிவித்ததும், ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

பரந்தாமன் அளித்த பேட்டி:

த.வெ.க., ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி வெற்றி பெறுவேன். த.வெ.க., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என, சொல்லி வருகின்றனர். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடையவில்லை. விலைவாசி அதிகரித்து விட்டது. மின் கட்டணம் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

முதியோர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. விதவையர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி, வெற்றி கனி பறிப்போம். அக்டோபர் முதல் மதுராந்தகம், தாராபுரம் தி.மு.க., தொகுதிகளாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@குழப்பத்தில் கம்யூ., கட்சிகள்


இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்கும் விஷயத்தில், கம்யூ., கட்சிகள் குழப்பமான நிலையில் உள்ளன. இதுகுறித்து, கம்யூ., கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது தொடர்பாகவும், இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பது தொடர்பாகவும், இரு கம்யூ., கட்சிகள் கூட்டு ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதில், குறைந்தபட்ச செயல்திட்டத்தை, த.வெ.க., ஏற்றுக்கொள்ளும் வரை, கூட்டணியில் சேரப்போவது இல்லை என்பது, ஆளும் மேலிடத்திடம் சொல்லப்பட்டு விட்டது. ஆனால், இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிக்கும்படி, த.வெ.க., கேட்டுக் கொண்டுள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்து வருபவர்களை, த.வெ.க.,வில் சேர்க்கக்கூடாது என, கம்யூ., கட்சிகள் உறுதியாக கூறி வந்தன.

அதை அமைச்சர்கள் வாயிலாக, முதல்வரிடம் கூறியிருந்தோம். ஆனால், அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. 'இந்நிலையில், ராஜினாமா செய்ததால் வந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது' என, இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளின் மாநில குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஆனால், இரு கம்யூ., கட்சிகளின் தேசிய குழு உறுப்பினர்களில் பலரும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், 'த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்; இல்லையெனில், தி.மு.க.,வுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தது போலாகி விடும்' என்கின்றனர். அப்படியென்றால், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர். இப்படி கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதால், குழப்பமான சூழல் நீடிக்கிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.block_B


@block_G@ தாராபுரம் வேட்பாளர் 'பயோடேட்டா'

பெயர்: சுகன்யா வயது: 34

படிப்பு: எம்.ஏ., - பி.எல்.,

தொழில்: வழக்கறிஞர்

கட்சி பதவி: திருப்பூர் கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர்

கணவர்: மணிவாசகம்

கட்சி பதவி: மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்

மகள்: அக் ஷயா, 6 வயதுblock_G



@block_Y@மதுராந்தகம் வேட்பாளர் 'பயோடேட்டா'

பெயர்: ஐ.பரந்தாமன், 49

பிறந்த ஊர்: பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்

மனைவி: பிரேமா

படிப்பு: பி.ஏ., - பி.எல்.,

தொழில்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

கட்சி பொறுப்பு: தி.மு.க., சட்டத்துறை இணைச் செயலர்

கடந்த 2021ல் எழும்பூர் தொகுதியில் வெற்றி block_Y

Advertisement