இயற்கைக்குப் புதிய சவால்: வன உயிர்கள் வாசல் தேடும் காலம்

காடுகள் சுருங்கி, தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் பெருகி வரும் நிலையில், வன உயிரினங்களின் வாழ்விடமும் சுருங்கி வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வன உயிரினங்கள் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. ஒருபுறம் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் அவற்றால் ஏற்படும் பயிர் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளையும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு இதனால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதை வலியுறுத்தி ஆண்டுதோறும் அக்., 2 முதல் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூர் மாவட்டம், மாசு, நீர் பற்றாக்குறை, குறைந்த மழைப்பொழிவு உள்ளிட்ட சூழலியல் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமாகிறது. நீர்நிலைகளைத் துார்வாருதல், ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல், நாட்டு மரங்களை வளர்த்தல் உள்ளிட்ட பணிகளில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மான்களால், புதுப்பாளையம் பகுதியே தற்போது 'மான்களின் தோட்டம்' போல் மாறியுள்ளது. யானை போன்ற பெரிய வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இல்லாதபோதும், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதும், மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.

திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் கூறியதாவது:

வன உயிரினப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை பொதுமக்களும், இளைஞர்களும் தெரிந்து கொள்வது அவசியம். எறும்புத்தின்னி, உடும்பு, பாம்புகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் சட்டத்தின் அட்டவணை -1 பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றைப் பிடிப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும்.

குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. வனத்துறைக்கு தகவல் அளித்தால், அவற்றைப் பாதுகாப்பாக மீட்பார்கள். வன உயிரின வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகளும், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் சதுப்புநிலப் பகுதிகளுக்கு நேரடி விழிப்புணர்வு பயணமும் நடத்தப்பட உள்ளது.

இயற்கையைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

வேட்டைக்கு துப்பாக்கி உரிமம் கிடையாது



துப்பாக்கி உரிமம் சுயபாதுகாப்புக்காக வழங்கப்படுகிறதே தவிர, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்ல. வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஆயுதங்கள் குறித்து தகவல் கிடைத்தால், அவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வன உயிரினங்களைப் பாதுகாப்பதில் சட்டத்தை அறிந்திருப்பதும், அதை முறையாகக் கடைப்பிடிப்பதும் முக்கியம்.block_B

Advertisement