பொருளாதாரம் பற்றி அறிய புத்தகம் படித்தால் போதாது தெருக்களில் மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும்: 'துக்ளக்' இதழ் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு
சென்னை: ''நாட்டின் பொருளாதாரத்தை, பங்குச் சந்தை குறியீடுகளால் மட்டுமே அளவிடும் பார்வை மாற வேண்டும். இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ள புத்தகங்களையும், கல்லுாரி பாடங்களையும் மட்டும் படித்தால் போதாது. தெருக்களுக்கு சென்று, மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும்,'' என, 'துக்ளக்' இதழ் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார்.
'குமுதம்' குழுமம் சார்பில், 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' என்ற, தினசரி நாளிதழ் தொடக்க விழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள, தனியார் விடுதியில் நேற்று நடந்தது. 'துக்ளக்' இதழ் ஆசிரியர் குருமூர்த்தி, நாளிதழை தொடங்கி வைத்து பேசியதாவது:
காந்திய சிந்தனையாளர் தரம்பாலின் வழிகாட்டுதலால், நம்நாட்டின் பொருளாதாரத்தை நேரில் புரிந்து கொள்ள, நாடு முழுதும் பயணம் செய்தேன். அரசின் மானியம் இல்லை. பெரிய வங்கிகளின் கடன் இல்லை. இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளில் தொழில் நகரங்கள் உருவாகி உள்ளன. இதற்கு குஜராத்தின் மோர்பி, தமிழகத்தின் திருப்பூர், கரூர் உள்ளிட்ட நகரங்களே சிறந்த உதாரணங்கள்.
குஜராத்தின் மோர்பியில், ஆங்கிலமே தெரியாத பல தொழிலாளர்கள், வீடுகளிலேயே உற்பத்தி செய்து, உலக சந்தைக்கு பொருட்களை அனுப்புகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு, ஆங்கில கல்வியே அடிப்படை என்ற பொதுவான கருத்தை, இது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. வெள்ளம், நிலநடுக்கம் என, பேரழிவுகளை சந்தித்தும், மோர்பியின் தொழில் பொருளாதாரம் மீண்டு நிற்கிறது.
திருப்பூரிலும் இதே நிலை தான். அங்கு ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர், 'பிளஸ் 2' வகுப்புக்கு கீழ் படித்தவர்கள். பட்டதாரிகள் மிகவும் குறைவு. ஆனால், உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்கின்றனர். ஆங்கிலம் தெரியாத தொழிலதிபர், ஆங்கிலம் தெரிந்தவரை வைத்து, உலக சந்தையுடன் பேரம் பேசுகிறார். இதுதான் இந்திய தொழில் முனைவின் தனித்தன்மை.
கரூரிலும் வித்தியாசமான பொருளாதார நடைமுறை உள்ளது. மேற்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு, தொழில் முனைவோர் மட்டுமல்ல; குடும்ப அமைப்பும் முக்கிய காரணம். குடும்பத்தை நிர்வகிப்பது, சேமிப்பை உருவாக்குவது, தொழிலில் பங்களிப்பது என, பெண்களின் பங்கு மிகப்பெரியது.
இந்த சமூக அமைப்பை புரிந்து கொள்ளாமல், இந்திய பொருளாதாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை பங்குச் சந்தை குறியீடுகளால் மட்டுமே அளவிடும் பார்வை மாற வேண்டும். இந்தியர்களின் சேமிப்பில், பங்கு சந்தையின் பங்கு மிகக் குறைவு. நிலம், தங்கம் போன்றவையே, பெரும்பாலான குடும்பங்களின் முக்கிய முதலீடுகள்.
அதனால், பங்குச்சந்தை செய்திகளையே, பொருளாதார செய்திகளாக காட்டுவது, இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதியை மறைத்து விடுகிறது. நம் நாட்டின் உண்மையான பொருளாதாரம், தொழிற்சாலைகளிலும், சிறு நகரங்களிலும், வீடுகளிலும், குடும்பங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, புத்தகங்களையும், கல்லுாரி பாடங்களை மட்டும் படித்தால் போதாது. தெருக்களுக்கு சென்று மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும். அப்போது தான், பொருளாதாரத்தின் உண்மையான முகம் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் வைத்து, அடித்தட்டு மக்கள் வரையில், நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகம் என்பது, குறிப்பிட்ட சில நிபுணர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்து விடக்கூடாது. சிறு தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் வீட்டின் 'முதல் நிதி அமைச்சரான' இல்லத்தரசிகளுக்கும், எளிமையாக சென்றடைய வேண்டும். 'அறிவு, தெளிவு, செழிப்பு' ஆகிய மூன்று முக்கிய இலக்குகளுடன், இந்த புதிய நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், வேலுார் மற்றும் திருச்சி பதிப்பு வெளியீட்டாளர் ஆர்ஆர்.கோபால்ஜி, குமுதம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன், 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' ஆசிரியர் ரெங்கநாதன், குமுதம் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் தியாக செம்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெருக்களில் மக்களின் வாழ்கையையே பார்க்க வேண்டும் என்று கூறிய கருத்து கண்டிக்கப்பட வேண்டிய கருத்து. மக்கள் என்ன தெருவிலா இருக்கிறார்கள்?மேலும்
-
இந்தியா - இலங்கை கூட்டு பணி குழு கூட்டம்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்
-
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
-
குடும்ப பிரச்னை கணவர் தற்கொலை
-
போதை எதிர்ப்பு சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
-
பள்ளி மாணவன் மாயம் போலீசார் விசாரணை
-
மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு சேதராப்பட்டில் நள்ளிரவில் மறியல்