சோதனை கடந்து சாதனை படைத்த இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டில்

நகோயா: ஆசிய விளையாட்டில் வறுமை, காயம் உட்பட பல தடைகளை கடந்து இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு நடந்தது. இதில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உட்பட 85 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது. இதில் கடின சவால்களை கடந்து முத்திரை பதித்த சிலர்.

மன்பிரீத் கவுர், 36, (குண்டு எறிதல்), வெண்கலம்
பஞ்சாப், சஹவுலி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது 12வது வயதில், தந்தை காலமானார். 2006ல் இருந்து தாயார் பக்கவாதத்ததால் அவதிப்படுகிறார். ஊக்கமருந்து சோதனையை தவிர்த்ததற்காக, 2019ல் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு, ஓய்வு பெறும் வயதில் பதக்கம் வென்றிருக்கிறார்.
இவர் கூறுகையில்,''என் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. வறுமை, ஊக்க மருந்து தடை, காலில் எலும்பு முறிவு, 'சிசேரியன் ஆப்பரேஷன்' மூலம் குழந்தை பிறந்ததால் பயிற்சியை மீண்டும் துவக்க முடியாதது என பல சோதனைகளை சந்தித்தேன். குண்டு எறியும் நுணுக்கத்தில் மாற்றம் செய்து, சாதித்தேன். நான் பதக்கம் வென்றதை அரங்கில் இருந்து என் 14 வயது மகள் ஜஸ்நுார், கணவரும் பயிற்சியாளருமான கரம்ஜீத் சிங் பார்த்தது 'ஸ்பெஷல்' தருணம்,''என்றார்.

திக் ஷா, 25, (கோல்ப்), வெள்ளி
ஹரியானாவை சேர்ந்தவர் திக் ஷா தாகர். பிறக்கும் போது காது கேளாதவர் (செவித்திறன் இல்லாதவர்). 6 வயதில் சிறப்பு கருவி அணிந்தார். தனது 7 வயதில், காது கேளாத சகோதரர் யோகேஷுடன் இணைந்து கோல்ப் விளையாடினார். தந்தை நரிந்தர், ராணுவத்தில் கர்னலாக இருந்தார். கோல்ப் போட்டிகளில் பங்கேற்ற இவர், மகளுக்கு பயிற்சி தந்தார்.
காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்கில்' 2 தங்கம், 1 வெள்ளி வென்றார். ஒலிம்பிக், 'டெப்லிம்பிக்' என இரண்டிலும் பங்கேற்ற உலகின் முதல் நட்சத்திரம் என சாதனை படைத்துள்ளார். இம்முறை அணிகளுக்கான பிரிவில் வெள்ளி வென்றார்.

மீராபாய் சானு, 32, (பளுதுாக்குதல்), வெள்ளி
மணிப்பூரின் பின்தங்கிய குடும்பத்தில் கடைக்குட்டியாக (6வது) பிறந்தவர் மீராபாய் சானு. இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்ட இவர், துவக்கத்தில் விறகுகளை சுமந்து, தனது உடலை வலிமையாக்கினார். பயிற்சிக்காக, அடிக்கடி மணல் லாரியில் பயணித்து, இம்பால் சென்றார். ஒலிம்பிக், காமன்வெல்த்தை தொடர்ந்து ஆசிய விளையாட்டிலும் அசத்திய மீராபாய், மூன்று முக்கிய போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தினார்.

பிரனவி, 23, (கோல்ப்), தங்கம்
கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்தவர் பிரனவி அர்ஸ். 6 வயதில் கோல்ப் விளையாடத்துவங்கிய இவர், 17 வயதில் 2020ல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். 2025ல் மும்பையில் நடந்த தொடரில் வீரர்களுடன் பங்கேற்று, பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதித்தார்.
கடந்த 2023, ஆசிய விளையாட்டில் 13வது இடம் பெற்றார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட பிரனவி, கோல்ப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.

சுஜீத் கல்கல், 23, (மல்யுத்தம்), தங்கம்
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர் சுஜீத் கல்கல். தந்தை தயானந்த், தேசிய அளவிலான மல்யுத்த வீரர். அவரது 'அட்வைஸ்' படி வளர்ந்தார் சுஜீத். தற்காப்பு, விரைவாக தாக்குவதில் வல்லவர். 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உலக சாம்பியனாக உள்ளார். தற்போது, சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக 24 வெற்றியை பதிவு செய்த இவர், ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்றுள்ளார்.

பிரின்ஸ் நோபிள், 30, (பாய்மரப்படகு), வெள்ளி
கேரளாவின் கொச்சியில் பிறந்தவர் பிரின்ஸ் நோபிள். இவரது தந்தை மீனவர். தனது 13வது வயதில் படகு ஓட்டக் கற்றுக்கொண்ட நோபிளுக்கு, 2018ல் அதிர்ச்சி காத்திருந்தது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இவரது தந்தை மரணமடைந்தார். இதனையடுத்து தனது தந்தையின் நினைவாக பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். தாயார் கொடுத்த ஊக்கத்தால் ஆசிய விளையாட்டில் தனது உறவினர் மானு பிரான்சிசுடன் இணைந்து பதக்கம் வென்று சாதித்தார். இப்பதக்கத்தை தந்தைக்கு அர்ப்பணித்தார் நோபிள்.

Advertisement