மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

-–சிறப்பு நிருபர்–

‘தமிழகத்தில் போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிய உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலையில் சுந்தரராஜன் என்பவரது நகைக்கடையில் இருந்து கடந்த 2004ல் 3.5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பான நடந்த விசாரணையின்போது, போலீசார் சட்டவிரோதமாக மிரட்டி துன்புறுத்தியதாக, நகைக் கடை உரிமையாளர் சுந்தரராஜன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், போலீசார் அத்துமீறி நடந்து கொண்டது உறுதியானதால், பாதிக்கப்பட்ட சுந்தரராஜனுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சுந்தரராஜன் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில மனித உரிமைகள் ஆணையம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என கோரி உத்தரவிட்டனர்.

Advertisement