தேர்தல் கமிஷனை நோக்கி ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள் பேரணி! தலைமை தேர்தல் கமிஷனரை கண்டித்து முழக்கம்

– சிறப்பு நிருபர் –: டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், பார்லிமென்டில் இருந்து தேர்தல் கமிஷன் நோக்கி, காங்., – சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள் பேரணி செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது. தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

எஸ்.ஐ.ஆர்., உட்பட பல்வேறு விவகாரங்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், இதற்கு சக தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பல முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆங்கில நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தேர்தல் கமிஷன் மறுத்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த இண்டி கூட்டணி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது. மேலும், அவரை கண்டித்து, ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் நாடு முழுதும் போராட்டங்களையும் அக்கூட்டணி நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, டில்லியில், தேர்தல் கமிஷனை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு, பார்லி., வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நேற்று கூடினர். இதில், காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான பிரியங்கா, திரிணமுல் எம்.பி., அபிஷேக் பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவிர, தமிழக எம்.பி.,க்கள் திருமாவளவன், துரை வைகோ, வெங்கடேசன், ஜோதிமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பார்லி.,யின் பிரதான வாயிலான மகர் துவார் பகுதியில் கூடிய எம்.பி.,க்கள், அங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், போக்குவரத்து பவன் மற்றும் நிடி ஆயோக் – -ஆகாஷ்வாணி பவன் இடையே இரும்பு தடுப்புகளை அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பேரணிக்கு அனுமதி பெறவில்லை என்றும், 30 எம்.பி-.,க்கள் மட்டுமே தேர்தல் கமிஷன் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட சூழலில், 200-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நிடி ஆயோக் அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி, தேசியக் கொடியை ராகுல் அசைத்ததால் பரபரப்பும், ஆரவாரமும் ஏற்பட்டது. பின், மற்ற தலைவர்களுடன் சாலையில் அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அங்கிருந்து அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்ற போலீசார், பின் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட பின்னரும், ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்த ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது ராகுல் கூறியதாவது:

தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசவே வந்துள்ளோம். ஆனால், போலீசார் எங்களை தடுத்து நிறுத்துகின்றனர். எங்களை சந்திக்க தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மறுப்பது ஏன்? எங்களை பார்த்து அவர் ஏன் பயப்படுகிறார்? நான் ஜனநாயகத்தை காப்பதற்காகவே இங்கு நிற்கிறேன். என்னுடன் வந்துள்ள அனைத்து எம்.பி.,-க்களும் அதற்காகவே வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் இணைந்து நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர். ஓட்டு திருட்டு மூலம் பா.ஜ.,வினர் நாட்டை கைப்பற்றி உள்ளனர். இந்த துரோகத்தை செய்தவர்கள் தப்ப முடியாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரத்தடியில் அமர்ந்து, 9 மணி நேரத்திற்கும் மேல் போராடிய ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை இரவு 8:00 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.

@block_B@

ராகுல் குற்றச்சாட்டு



தேர்தல் கமிஷன் விளக்கம்

மற்ற தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதலை பெறாமல், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் – 6ல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக மாற்றம் செய்ததாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

இதை மறுத்து, தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

பீஹாரில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மட்டும் தன்னிச்சையாக ஒப்புதல் அளிக்கவில்லை. மூன்று தேர்தல் கமிஷனர்களும் இணைந்தே ஒப்புதல் அளித்தனர். கடந்த மே 27ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் கடந்த, 26ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், படிவம் – -6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ராகுலின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. மக்களை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்களை அவர் பரப்பி வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B

@block_B@

மூன்று கோரிக்கைகள்



ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல், சமாதானம் பேச வந்த போலீஸ் உயரதிகாரிகளிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

* தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்

* இல்லையெனில், போராடுவதற்கு இடம் தர வேண்டும்

* அதுவும் இல்லையெனில், என்னை கைது செய்து கொள்ளுங்கள்.

தங்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்கள் யாரிடமும் இருந்து, முறைப்படி விண்ணப்பம் ஏதும் வரவில்லை என, தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.block_B

@block_B@

ராகுல், பிரியங்கா தந்திரம்



எல்லாமே மாறிப்போனது

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, டில்லியில் உள்ள வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 15க்கும் அதிகமான பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில், ராகுலும், பிரியங்காவும் செய்த செயலால் அனைத்துமே மாறிப்போனது. ஆகாஷ்வாணி பவனுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றில், பிரியங்கா ஏற்கனவே அமர்ந்திருந்தார். ராகுலும் அதில் ஏறத் தயாராக இருந்தார்.

அப்போது, திடீரென இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். அடுத்த வினாடியே, ஆகாஷ்வாணி பவனுக்குள் நுழைந்த அவர்கள், ஆலமரத்தடியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், டில்லி போலீசார் திகைத்து போயினர். இதையடுத்து, ஆகாஷ்வாணி பவன் வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராகுலும், பிரியங்காவும் இவ்வாறு செய்யவில்லை எனில், போராட்டம் முற்பகலிலேயே முடிந்திருக்கும்.block_B

@block_B@

ஜனாதிபதிக்கு கடிதம்



ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, ‘இண்டி’ கூட்டணி நேற்று எழுதிய கடிதம்:

நாடு முழுதும் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணியில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு பொறுப்பேற்கும் விதமாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இன்று முதல் 9 வரை, இடைப்பட்ட ஒரு நாளில் உங்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில், காங்., தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு – காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.block_B

Advertisement