பாறை உருண்டு விழுந்தது; காரில் சென்றவர் பலி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலைப்பகுதியில் பாறை உருண்டு விழுந்ததில் காரில் சென்றவர் உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலைப்பகுதியில் நேற்று இரவு (அக் 06) கன மழை பெய்தது. இதில் குன்னூர் சாலையில் இரண்டு இடங்களில் மரங்கள் சரிந்து இருந்தன. அதை, அப்புறப்படுத்தி விட்டனர்.
இன்று காலை 9:00 குன்னூர் அருகே உள்ள ஜகதளாகவைச் சேர்ந்த முன்னாள் ஏர்போர்ட் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, 66, இவரது மனைவி தேவகி, 56, மகன் கார்த்திக், 29, உறவினர் இந்திரா, 68, சிந்தாமணி, 62, ஆகிய ஐந்து பேர் காரில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வந்து கொண்டிருந்தனர்.
மேட்டுப்பாளையம் சாலையில் பாறை ஒன்று உருண்டு வந்து கார் மீது விழுந்துள்ளது; இதில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார் தேவகியும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் கிருஷ்ணமூர்த்தி வரும் வழியில் இறந்து விட்டார் என கூறினர். மேல் சிகிச்சைக்காக தேவகியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.