கோவையின் அடையாளம் கிரைண்டர் உற்பத்தி ஊக்குவிக்கப்படுமா?

கோவையின் அடையாளமான கிரைண்டர் உற்பத்தியை ஊக்கப்படுத்த ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தென்னிந்தியர்களின் அடையாளமாக இட்லி, தோசை உள்ளது. இட்லி, தோசைக்கான கிரைண்டர் உற்பத்தி கோவையின் அடையாளமாகும். கோவை மாவட்டத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக கிரைண்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 80 சதவீதம் கிரைண்டர்கள் கோவையில் உற்பத்தியாகிறது. கோவை கிரைண்டர் உற்பத்திக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. கிரைண்டர் உற்பத்தியில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. தற்போது 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களே உள்ளன. 20,000க்கும் மேற்பட்டோர் இதை நம்பியுள்ளனர். உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தொடர் நெருக்கடிகளால் கோவை கிரைண்டர் உற்பத்தியில் 50 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்கிறார் கோவை வெட் கிரைண்டர், உதிரி பாகங்கள் சங்கம் (கவுமா) செயலர் சவுந்திரகுமார். அவர் மேலும் கூறியதாவது:

'ஆர்டனரி', 'டேபிள் டாப்', 'டில்டிங்', 'கமர்சியல் டில்டிங்' கிரைண்டர்கள் உற்பத்தி செய்கிறோம். ஆர்டனரி கிரைண்டரில் 2 லிட்டர் முதல் 40 லிட்டர் வரையிலான கிரைண்டர்கள் உள்ளன. டில்டிங்கில் 2 முதல் 60 லிட்டர் வரையிலான கிரைண்டர் உள்ளன. டேபிள் டாப்பிலும் ஆர்ம் மாடல், வித் அவுட் ஆர்ம், மோனோ ரோலர் பல வகைகள் உள்ளன. மக்களின் உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டது. முதலில் தென்னிந்தியர்கள் வீடுகளில் இரண்டு வேளை இட்லி, தோசை இருக்கும். இப்போது அதை தவிர்த்து வேறு வகை உணவுகளை விரும்புகிறார்கள். ஸ்விகி, ஜொமேட்டோ எழுச்சியால் மக்கள் இருந்த இடத்தில் விதவிதமான உணவை ஆர்டர் போட்டு சாப்பிடுகிறார்கள். ரெடிமேட் பாக்கெட் மாவு புழக்கம் அதிகரித்துவிட்டது. தினசரி 3,000 மாவு பாக்கெட் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன. முன்பு திருமணமானவுடன் கொடுக்கப்படும் சீர்களில் கிரைண்டர் இருக்கும். இப்போது அந்த பழக்கமும் இல்லை.

கணவன் மனைவி பெரும்பாலும் வேலைக்கு செல்கிறார்கள். மாவை ஊற வைத்து, அரைப்பது, கழுவுதல் பணிகளை அவர்களால் செய்ய முடிவதில்லை. பணி முடிந்து வரும்போது மாவு பாக்கெட் வாங்கி சமைக்கிறார்கள். இந்த காரணங்களால் கிரைண்டர் பயன்பாடு குறைந்துவிட்டது. 2010ம் ஆண்டுவரை மாதம் கோவையில் சராசரியாக 2 லட்சம் கிரைண்டர்கள் உற்பத்தி செய்தோம். 2011–2016 காலகட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 1.75 கோடி கிரைண்டர்கள் கோவையில் தான் உற்பத்தி செய்தோம். இப்போது மாதம் சராசரியாக 80,000 முதல் ஒரு லட்சம் கிரைண்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறோம். வெளி பகுதிகளில் உள்ள கிரைண்டர் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் கூட கோவையில் இருந்து தான் செல்கின்றன. உலகம் முழுவதும் தென்னிந்தியர்கள் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் கிரைண்டர் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆப்ரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து என கிரைண்டர் செல்லாத நாடுகளே இல்லை.

இப்போது கிரைண்டர் தொழில் அவ்வளவு எளிதாக இல்லை. இந்த தொழிலில் இருந்த பலர் வேறு துறைக்கு சென்றுவிட்டனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.1,000 போக்குவரத்து செலவாகிறது. இந்த விலை பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். குடிசை தொழிலாக செய்யும் குறு நிறுவனங்களின் நிலை மோசமாக உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட இந்தியாவுக்கு ஆங்காங்கே சிறிதளவு செல்கிறது. திருமண ஆர்டர்களை செய்யும் கேட்டரிங் நிறுவனங்களே, மாவை வெளியில் இருந்து வாங்கி கொள்கிறார்கள். இப்போதுள்ள சந்தையும் குறையவே வாய்ப்புள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரை கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி இருந்தது. இப்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement