நம்பிக்கையளிக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள்: ஜவுளித்துறை எதிர்காலம் பிரகாசம்

வெளிநாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட நடவடிக்கையால் ஜவுளி உற்பத்தியில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்பை கொடுப்பது ஜவுளித்துறை. 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. 60 லட்சம் விவசாயிகள் பருத்தி உற்பத்தியை சார்ந்துள்ளனர். கடந்த ஒரு தசாப்தமாக ஜவுளித்துறை ஏராளமான நெருக்கடியில் சிக்கி தவித்தது. தமிழகத்தில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டன. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அந்த நிலை மாறி வருகிறது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் துரை பழனிசாமி கூறியதாவது:

ஜவுளித்துறை கடந்த 10 ஆண்டுகளாக சிரமமான நிலையில் இருந்தது. சீனா, வங்கதேசம், வியட்நாம் நாடுகளில் செயற்கை இழை 80 சதவீதம், பருத்தி 20 சதவீதம் பயன்படுத்தப்படும். நம் நாட்டில் மூலப்பொருள் விலை அதிகமிருந்ததால் ஏற்றுமதி செய்ய முடியாமல் இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு 36 பில்லியன் டாலர் ஜவுளி ஏற்றுமதி இருந்தது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. ஆயத்த ஆடையில் 17 பில்லியன் டாலர் ஏற்றுமதியானாலும், அதில் 12 பில்லியனுக்கு மேல் பருத்தியை நம்பியுள்ளோம். உள்நாட்டில் தயாராகும் பஞ்சு, நூல், செயற்கை இழைகளில் தயாரிக்கும் துணிக்கு உலகத்தில் போட்டித்திறனே இல்லாமல் இருந்தது.

முன்பு 50 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதி செய்தோம். இப்போது 75 லட்சம் பேல் இறக்குமதி செய்கிறோம். இந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஜவுளி துறைக்கு நெருக்கடி ஏற்படுத்திய வரிகளை நீக்கினர். ஜவுளித்துறை கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி வரியையும் சீரமைத்துள்ளனர். தற்போது ஜவுளித்துறையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி தான் நிலவுகிறது. இப்படி பெரும்பாலான பிரச்னைகள் சரியாகிவிட்டன.

அமெரிக்கா, ஐரோப்பாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டும், ரஷ்யா உக்ரைன் போரால் நெருக்கடி உள்ளது. அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல், ஏற்றுமதிக்காக 50 நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தமிடும் பணி நடக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் நம் ஜவுளி சந்தை மதிப்பை 300 பில்லியன் டாலராகவும், 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகம் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தி ஆண்டுக்கு 400 லட்சம் பேலாக இருந்தது. இப்போது அது 290 லட்சம் பேலாக குறைந்துவிட்டது. வெளிநாட்டு வரியில்லா ஒப்பந்தங்களில், பருத்தி உலக விலைக்கே கிடைத்தால் தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

2027ம் ஆண்டில் நமக்கு 365 லட்சம் பேல் தேவைப்படும். இறக்குமதி வரியை தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக நீக்க வேண்டும். 2008ம் ஆண்டில் இருந்து 2021 வரை இறக்குதி வரி இல்லை. வரி இருப்பதால் விளைச்சலின்போது, பன்னாட்டு நிறுவனங்கள் விலையை குறைத்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தொழிலும் பாதிக்கப்படுகிறது. இறக்குமதி வரியை மட்டும் ரத்து செய்தால் போதும்.

மூன்றில் ஒரு பங்கு ஜவுளி உற்பத்தி தமிழகத்தில் உள்ளது. மாநில அரசும் ஜவுளித்துறையின் கோரிக்கையை கொள்கைகளில் மாற்றம் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பருத்தி விளைச்சல் குறைந்துவிட்டது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.5,659 கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் சர்வதேச ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குகிறார்கள். திறன் மேம்பாடு, மாசு கட்டுப்பாடு, தொழில்நுட்ப விரிவாக்கம் ஆகியவற்றுக்கு மேலும் பல புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளனர். இவற்றை சரியாக செயல்படுத்தி, தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தினால் ஜவுளி தொழில் பின்னடைவாக வாய்ப்பே இல்லை. ஜவுளித்துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement