தினமலர் செய்தி எதிரொலி பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி ஆய்வு

பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி திடீர் ஆய்வு செய்து, மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பள்ளி நேரத்தில் கும்பல், கும்பலாக நகரில் சுற்றி வந்து பிரச்னை செய்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரியான மகாலட்சுமி நேற்று காலை அதிரடியாக, பிரச்னைக்குரிய பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் திருமாவளவன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர்கள் பாபு, ேஹமலதா முன்னிலை வகித்தனர். சி.இ.ஒ., மகாலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேசுகையில், மாணவர்கள் பள்ளி நேரத்தில், வெளியில் சுற்றினாலோ, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடக்கப்படம். மாணவர்கள் கல்வி கற்பதில் கவனம் செலுத்தி, நன்னடத்தையில் சிறந்து விளங்க வேண்டும்.

பள்ளி அருகில் போதை பொருட்கள் விற்கப்பட்டால், அதுகுறித்த போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் பாதுகாக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்துள்ளோம் என்றனர்.

கூட்டத்திற்கு பின் சி.இ.ஓ., மகாலட்சுமி ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement