இலக்கை தாண்டினாலும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மானியம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

சென்னை: ''மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தில், வரும் மார்ச் மாதத்திற்குள், ஒரு லட்சம் வீடுகளுக்கு மேல் விண்ணப்பம் வந்தாலும், மானியம் வழங்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில், சூரியசக்தி மின்சார மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் தொடர்பான சிறப்பு கலந்தாய்வு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

இதில் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார், பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர் ஸ்ரீதர், சூரியசக்தி மின் சாதன உற்பத்தியாளர்கள், மேற்கூரை சூரியசக்தி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:

தமிழகத்தில், வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசின் மானியத்துடன், தமிழக அரசின் மானியமும் சேர்த்து, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் சிறப்பு திட்டம், சமீபத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும், 20,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மத்திய அரசு மானியம் கிடைத்ததும், மாநில அரசின் கூடுதல் மானியத்தின் கீழ், 1,500 பயனாளிகளுக்கு மாநில அரசின் மானியம் வழங்கப்பட்டது.

வரும் மார்ச்சுக்குள், ஒரு லட்சம் வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை தாண்டி விண்ணப்பம் வந்தாலும், மானியம் வழங்கும் நடவடிக்கைகள், முதல்வர் விஜயின் ஒப்புதலை பெற்று மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement