ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி; இந்தியாவின் 3 அம்ச திட்டங்கள்

1

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா முன்வைத்த திட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால், எரிசக்தி வினியோகம் உள்ளிட்ட வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுக்கும் இடையே நீடித்து வரும் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சமீபத்தில், உக்ரைன் சென்ற நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், போர் நிறுத்தம் ஏற்பட, மூன்று அம்சங்களை கொண்ட அமைதி திட்டத்தை முன்வைத்தார்.

அதில், இரு தரப்பும் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டும், கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தடையற்ற வர்த்தக கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹா, 'போரை நிறுத்த வெவ்வேறு நாடுகள் முன்மொழிந்த திட்டங்களில், இந்தியாவின் திட்டமே அருமையானது' என பாராட்டினார். பிரதமர் மோடி முன்வைத்த யோசனைகளும் சிறப்பானதாக இருந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் புகழ்ந்திருந்தார்.

Advertisement