பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு; ஐநாவில் இந்தியா கண்டனம்

1

நியூயார்க்: பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பொதுச்சபையில் விவாதம் நடந்தது. இதில் மேற்கு திரிபுரா தொகுதி லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் திரிபுரா முதல்வருமான பா.ஜ.,வின் பிப்லப் குமார் தேப், இந்தியா சார்பில் பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்து முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இதற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் இலக்கு ரீதியிலும், அளவானதாகவும் இருந்தன.

பயங்கரவாதத்துக்கு எதிராக சொந்த மக்களை பாதுகாக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் குறித்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு தேவையின்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் நடைபெறும் வன்முறை மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி ஆட்களை சேர்ப்பது உள்ளிட்டவற்றை தடுக்க வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்த, அது தொடர்பான விரிவான மாநாட்டை ஐ.நா., விரைந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement