1.77 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' 'டெண்டர்' கோரியது மின் வாரியம்

சென்னை: தமிழகம் முழுதும், 1.77 கோடி இணைப்புகளில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணிக்கு மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது.

தமிழகத்தில் வீடு, கடை உள்ளிட்ட மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்டேடிக் மீட்டர்'கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்'கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 2023 ஆகஸ்டில், 3 கோடி மீட்டர்கள் பொருத்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது. நிறுவனங்கள், அதிக விலை வழங்கியதால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

பின், 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய, டெண்டர் கோரப்பட்டது. இதில், 50 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆட்சி மாறியதால், இந்த டெண்டர், கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுதும் அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள வீடுகள் உள்ளிட்ட இணைப்புகளில், 1.77 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, நேற்று டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வழித்தடத்திலும் செல்லும் மின்சாரத்தை துல்லியமாக அறிய, 4.72 லட்சம் டிரான்ஸ்பார்மர்களிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. டெண்டரில் தேர்வாகும் ஒப்பந்த நிறுவனம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, 93 மாதங்களுக்கு பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement