வீடு, வணிக கட்டட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சிகளுக்கான அதிகார வரம்பு உயர்வு

சென்னை: தமிழகத்தில், வீடு, வணிக கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கட்டட அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:

உள்ளாட்சி அல்லது மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, விரைவாக அனுமதி பெற, இந்த முறை கொண்டு வரப் பட்டுள்ளது.

குடியிருப்பு கட்டடங்களுக்கு, 8,070 சதுரடி வரை உள்ள வீடுகளுக்கு, உள்ளாட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் அனுமதி பெறலாம். 3,230 சதுரடி வரை உள்ள கடைகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.

அதேபோல, 'சிட்கோ, சிப்காட், எல்காட்' மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் அமையும், 26 ஆயிரத்து 900 சதுர அடி வரையிலான தொழிற்சாலை கட்டடங்களுக்கு, மாவட்ட அலுவலகம் செல்லாமல் அனுமதி பெறலாம். இவற்றுக்கு, தமிழக ஒற்றைச்சாளர இணையதளத்தில் பதிவு செய்த கட்டட கலை வல்லுனர்கள் அல்லது முதல் நிலை பொறியாளர்கள் கள ஆய்வு செய்து, ஆவணங்களை சரிபார்த்து, மின்னணு முறையில் சான்றிதழ் வழங்குவர்.

கட்டட அனுமதி வழங்குவதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான அனுமதி பரப்பளவு உயர்த்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சியில், இதுவரை, 10 ஆயிரம் சதுர அடியாக இருந்த அனுமதி வரம்பு, தற்போது 16 ஆயிரத்து 140 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், அனுமதி வரம்பு 10 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 12 ஆயிரத்து 912 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிக கட்டடங்களுக்கான அனுமதி வரம்பு 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement