சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்: 'பாரா' ஆசிய விளையாட்டில்

புதுடில்லி: 'பாரா' ஆசிய விளையாட்டில் சாதிக்க இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில், சமீபத்தில் ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடந்தது. இதனை தொடர்ந்து இங்கு, வரும் அக். 18-24ல் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 18 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். மொத்தம் 492 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இந்தியா சார்பில் 80 வீரர், 41 வீராங்கனைகள் என, மொத்தம் 121 பேர், 6 வகையான போட்டிகளில் களமிறங்குகின்றனர். வரும் அக். 18ல் துவக்க விழா நடக்கவுள்ளது. இதன் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல், ஏந்தி வர உள்ளனர்.

டில்லியில் இந்திய நட்சத்திரங்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி (பி.சி.ஐ.,) தலைவர் தேவேந்திர ஜஜாரியா, தலைமை பயிற்சியாளர் சத்யநாராயணா, பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிம்ரன் சர்மா, பிரீத்தி பால், கபில் பர்மார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரா விளையாட்டு நட்சத்திரங்களான ராகேஷ் குமார் (வில்வித்தை), அசோக் குமார் ('பவர்-லிப்டர்'), பிரமோத் பகத் (பாட்மின்டன்), பவினா படேல் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். வீரர், வீராங்கனைகளுக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

மன்சுக் மாண்டவியா கூறுகையில், ''மாற்றுத்திறனாளி விளையாட்டு நட்சத்திரங்கள் ஏற்கனவே வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள். தற்போது பதக்கங்களுக்கான பயணத்திலும் வெற்றி பெற காத்திருக்கிறீர்கள். விளையாட்டு நட்சத்திரங்கள் ஒரு போதும் தோற்பதில்லை. ஒன்று வெற்றி பெறுகிறார்கள் அல்லது தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்கின்றனர். அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்,'' என்றார்.

பிரமோத் இலக்கு

இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் கூறுகையில், ''வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நாம் ஒவ்வொருவரும் கடினமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வரும் கவுரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இப்போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். தங்கம் வெல்வதே இலக்கு,'' என்றார்.

அணித்தேர்வில் குழப்பமா

வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியே, அணித்தேர்வில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டி, இந்திய பாரா துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கைவிடுமாறு, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் முழங்கங்களை எழுப்பியவாறு தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisement