கலெக்டர் அலுவலக கட்டுமானத்தால் சூழலியல் பாதிப்பு மதிப்பீடு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணியால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கென ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என, புகார் எழுந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, வல்லுனர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தென்காசி கலெக்டர் அலுவலக கட்டுமான திட்டத்திட்டம் அதன் பரப்பளவு அடிப்படையில் முன்கூட்டியே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் தொடங்கினால், அதற்கு அபராதம் விதிக்க வழி உள்ளது.

இதன்படி இத்திட்டத்துக்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பது உறுதியாவதால், சூழலியல் பாதிப்புகளுக்காக அபராதம் விதிக்கலாம். இந்த பின்னணியில், கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கலாம்.

இதே போன்று, இத்திட்ட விண்ணப்பங்களை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பரிசீலித்து முடிவு எடுக்கலாம். இந்நிலையில், தென்காசி கலெக்டர் அலுவலக கட்டுமான பணியால் சூழலியல் பாதிப்புகள் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை மதிப்பீடு செய்யலாம்.

குறிப்பிட்ட கால வரம்புக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement