தன்னிச்சையாக போராட்டம் நடத்துவதா?: ராகுல் மீது இண்டி கூட்டணி தலைவர்கள் அதிருப்தி

7

- சிறப்பு நிருபர் -

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டும் நிகழ்வாக திட்டமிடப்பட்டிருந்த பேரணியை, தனிப்பட்ட பேரணியாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா மாற்றி விட்டதாக, 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தர்ணா:



தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, காங்., சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி சார்பில், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி, நேற்று பேரணி நடந்தது. இதில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.பி.,க்கள் பேரணி சென்ற போது, ஆகாஷ்வாணி பவன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பஸ்சில் ஏற்றப்பட்டனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், அபிஷேக் பானர்ஜி உட்பட பல எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டு, பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காங்கிரசின் ராகுல், பிரியங்கா, வேணுகோபால், பவன் கெரா ஆகியோர் மட்டும், அருகில் இருந்த ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இறுதியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால், ராகுல், பிரியங்கா ஆகியோரின் தர்ணா மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. இந்த அறிவிக்கப்படாத தர்ணாவால், இண்டி கூட்டணி நடத்திய பேரணி, ராகுல், -பிரியங்கா போராட்டமாக மாறியது. இது, இண்டி கூட்டணி கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொந்தளிப்பு:



'ராகுல், பிரியங்கா மட்டும், ஆகாஷ்வாணி பவனில் தர்ணா நடத்த வேண்டிய தேவை என்ன; பின், எதற்காக ஒற்றுமையுடன் இருப்போம் எனக் கூறி பேரணி நடத்த வேண்டும்' என, பல தலைவர்கள் கொந்தளித்து விட்டனர். மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதி கோரிய முடிவையும் கூட, காங்., தன்னிச்சையாக எடுத்ததாக கூறப்படுகிறது. இதுவும் கூட்டணி கட்சி தலைவர்களை அதிருப்தி அடைய செய்தது.

இதை சமாளிக்கவே, டில்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்., தலைவர் கார்கே நேற்று மதிய உணவு விருந்து அளித்ததாக சொல்லப்படுகிறது. இது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், தலைவர்களுடனான இணக்கத்தை மீண்டும் உறுதி செய்யவே மதிய உணவு விருந்து அமைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

@block_G@

ராகுல் மீது வழக்கு



டில்லியில், நேற்று நடந்த பேரணியின் போது, அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.block_G

@block_B@

2வது நாளாக நேற்றும் போராட்டம்



டில்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று மதிய உணவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்ற கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் ஏறினர்.

அங்கிருந்து, ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி புறப்பட்ட அந்த பஸ்சை வழியிலேயே போலீசார் தடுத்தனர். அனுமதியின்றி ஜந்தர் மந்தரில் கூடுவதை தடுத்த போலீசார், கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.பி.,க்கள், பஸ்சிலிருந்து இறங்கி தடுப்புகளை தாண்ட முயன்றனர். சிலர், பஸ்களின் மேற்கூரை மீது ஏறி நின்று முழக்கமிட்டதால் நிலைமை மோசமானது.

போலீசார் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்ட பலரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென மயங்கிய பிரியங்கா, அங்கேயே சாலையில் படுத்துக் கொண்டார். இதனால், நிலைமை மேலும் மோசமானது.

பின், வேறு வழியின்றி அருகில் இருந்த பஸ்சுக்குள் ராகுலை இழுத்து சென்று போலீசார் ஏற்றினர். பிரியங்காவையும் வலுக்கட்டாயமாக துாக்கி சென்று பஸ்சில் ஏற்றினர். ஒரு கட்டத்தில், எம்.பி.,க்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் அனைவரையும் கைது செய்து போலீசார் அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் பதற்றம் நிலவியது.block_B

Advertisement