மதமாற்றத்திற்கு வெளிநாட்டு நிதி; இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

15

மதுரை: 'மதமாற்ற நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதி தடையின்றி அனுமதிக்கப்பட்டால், நாட்டின் இறையாண்மையே ஆபத்திற்குள்ளாகும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், கன்சியோன் பொது அறக்கட்டளை நிர்வாகம், எப்.சி.ஆர்.ஏ., எனும் வெளிநாட்டு நிதியுதவி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிதியுதவி பெற சான்று கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.

அரசின் கொள்கை



அதை நிராகரித்து, மத்திய உள்துறை துணை செயலர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில், அறக்கட்டளை நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள், ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'அறக்கட்டளை தியான மையத்தை நிறுவியுள்ளது. அதன் செயல்பாடுகளை மதம் சார்ந்ததாக வகைப்படுத்த முடியாது. அது மத அமைப்பு அல்ல' என்றார்.

மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தாளைமுத்தரசு, 'மனுதாரர் அமைப்பு மதம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. மதமாற்றம், நாட்டின் மதசார்பின்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிதி வருவ தை தடுப்பதே மத்திய அரசின் கொள்கை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வாதிட்டார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:



இந்த அறக்கட்டளையை நிறுவியவர் மற்றும் அமைப்பின் பின்னணியில் செயல்படும் முக்கிய நபர் ஒரு கிறிஸ்துவ மதகுரு. கிறிஸ்துவம் ஒரு மீட்பரை மையமாக கொண்ட மதம் என்ற உண்மையை மறந்துவிட முடியாது.

வெளிநாட்டு நிதியுதவியின் மூலம் நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் தேசிய கொள்கைகளில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபத்து



அவ்வாறான நிதியுதவிகள், நாட்டிற்குள் நிலவும் சமூக ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும். கேரளாவில் சமீபத்தில் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே ஏற்பட்ட உரசலை நாம் காண முடிந்தது.

மதமாற்ற நடவடிக்கைகளுக்கு வசதியாக வெளிநாட்டு நிதிகள் தடையின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டால் இறையாண்மையே ஆபத்துக்குள்ளாகும். எனினும், மேல்முறையீட்டாளர் அறக்கட்டளைக்கு அத்தகைய நோக்கம் ஏதேனும் இருப்பதாக நாங்கள் குற்றம் சாட்டவில்லை.

மனுதாரர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்த போதிலும், தங்களை மதசார்பற்ற அமைப்பாக தவறாக முன்னிறுத்தியுள்ளார். அதனால் தான் நிராகரிக்கப்பட்டது.

எந்தவொரு மத அமைப்பின் செயல்பாடுகளும், நாட்டின் மதசார்பின்மை தன்மை, சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத நிலையில் செயல்பட்டால், எப்.சி.ஆர்.ஏ., பதிவை பெறுவதற்கு தகுதியுடையவை. மதமாற்றம் செய்வதில் ஈடுபடும் அமைப்புகளுக்கு அப்பதிவு வழங்கப்படக் கூடாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement