கடிந்து கொண்டார் கணவர்; கவுரவித்தது திரையுலகம்
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
ஊர்க்காவல் படையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வில், 1,600 மீட்டர் ஓட்டத்தை, சேலை அணிந்தபடி வெறும் கால்களுடன் ஓடிய ஜார்க்கண்ட் பெண்ணின் வீடியோ, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவரை இழந்த கவிதா குமாரிக்கு இரு குழந்தைகள். அவர்களை வளர்த்து படிக்க வைக்கும் பொறுப்புடன், வயது முதிர்ந்த மாமனார், மாமியாரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் அவரிடம் இருந்தது.
வருவாய்க்கு வழி இல்லாத நிலையில், ஊர்க்காவல் படையில் ஆள் தேர்வு நடப்பதாக அறிந்தார் கவிதா. விண்ணப்பம் அளித்தவர், உடல் திறன் தேர்வுக்கும் சென்று விட்டார். டிராக் சூட், ஷூ போன்ற எதுவும் இல்லாத அவர், வெற்றுக்கால்களில் சேலை அணிந்தபடி 1,600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். 10 நிமிடத்துக்குள் ஓட வேண்டிய அந்த ஓட்டத்தை, வெறும் 6 நிமிடங்களில் ஓடி முடித்தார் கவிதா. அவர் ஓடியதன் வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், கவிதாவின் மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடிந்து கொண்டார் கணவர்; கவுரவித்தது திரையுலகம்
உத்தர பிரதேச மாநிலத்தின் தொலைதுார கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா. பிளஸ் 2 படித்த அவர், 'யூ டியூப், இன்ஸ்டாகிராம் வீடியோ'க்கள் வழியாக ஆங்கிலப்பயிற்சி அளிக்கிறார். விவசாய நிலத்தில் வேலை செய்தபோது, வீடியோ பதிவு செய்வதை கண்ட அவரது கணவர் கோபமாகி, கடிந்து கொண்டுள்ளார். அதை வருத்தத்துடன் யசோதா கூறியிருந்த நிலையில், அவரது வீடியோ ஒன்றை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பாராட்டியுள்ளார். அடுத்தடுத்து நடிகர்கள் மாதவன், அபய் தியோல், நடிகை மிருணாள் தாகூர் ஆகியோரும் அவரை பாராட்டியுள்ளனர்.
'என் வீட்டில் 'டிவி' கூட இல்லை; நான் பிரபலங்களை பின்தொடர்வதும் இல்லை. என் பணியை பாராட்டிய அற்புத மனிதர்களை பற்றி என் மாணவர்கள் என்னிடம் சொல்லத் தொடங்கியபோது, அது உண்மையிலேயே என் இதயத்தை தொட்டு விட்டது' என்று கூறியுள்ளார் யசோதா.
ஆட்டோவில் சுற்றும் நார்வே மேயர்
குஜராத்துக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவருடன், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார், சிந்தன் மதியா என்பவர். வெளிநாட்டுக்காரரை போட்டோ எடுத்து 'செக்' செய்தபோது, அவர், நார்வே நாட்டின் போர்சங்கர் நகர மேயர் ஜோ இங்கி ஹெஸ்ஜெவிக் என்றது கூகுள்.
நம்மூர் பந்தா அரசியல்வாதிகளை பார்த்து பழகியிருந்த சிந்தனுக்கு, நார்வே அரசியல்வாதி எளிமையாக இருப்பதும், இயல்பாக பேசுவதும், ஆட்டோவில் பயணிப்பதும் ஆச்சர்யமாக இருந்தது. உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 61 பேர், இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக ஆட்டோக்களில் பயணிப்பதாக கூறியுள்ளார் ஜோ. இந்த வீடியோ, வலைதளங்களில் ஏராளமானோர் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாரத்தான் வீரர்களுக்கு துணை; நாயும் சேர்ந்து ஓடியது 38 கி.மீ.,
உ.பி., மாநிலம், கான்பூரில் பயிற்சி பெற்ற வீரர்கள் சிலர், நீண்ட துார ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களை கவனித்த தெருநாய் ஒன்றும் கூடவே சேர்ந்து ஓடத் தொடங்கியது. பல மணி நேரம் இடைவிடாமல் வீரர்கள் ஓடினர்; நாயும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது. இதை கவனித்த வீரர்கள், அந்த நாய்க்கு 'பில்லுா கூகின்ஸ்' என்று பெயரும் வைத்து செல்லமாக கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.
அவ்வப்போது ஓட்டத்தின் நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபோது, நாயும் ஓய்வெடுத்தது; அதற்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தனர். மொத்தம் 38 கி.மீ., துாரம் அந்த நாய் தங்களுடன் ஓடி வந்ததாக கூறுகிறார், பிரதம் சிங் என்ற ஓட்டப்பந்தய வீரர். வீடியோவை கண்ட வலைதளவாசிகள், 'பில்லுாவை பார்த்துக் கொள்ளுங்கள் ப்ரோ' என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
விஞ்ஞானியை கொண்டாடிய குடும்பம்
இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்கா, ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர் கார்ல் டீசோரத், அந்த தகவலை தன் மகள்கள் இருவரிடம் கூறிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. இருவரும் மகிழ்ச்சியில் கூச்ச லிட்டபடி தந்தையை கட்டியணைத்துக் கொள்ளும் அந்த வீடியோவை, ஸ்டான்போர்டு பல்கலை வெளியிட்டுள்ளது. அங்கிருந்த மகனும், தந்தையை பாசத்துடன் கட்டிக் கொள்கிறார். வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
எல்லா நாட்டிலும் அரசியல்வாதிகள் தனக்குத்தானே சுய விளம்பரம் தேடுபவர்களாக தான் இருப்பார்கள். இந்தியாவில் ரொம்ப அல்பமாக இருக்கும் வெளிநாடுகளில் நாகரீகமாக இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்
it's a mother's run to save her children