கூட்டுறவு வங்கிகளில் நாளை கடன் மேளா

கரூர்:மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில், கடன் மேளா நாளை நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், கரூர் மாவட்டத்தில், 17 கிளைகள் மற்றும் இணைப்பு சங்கங்களாக, 85 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கி கிளைகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் பயிர் சாகுபடி, தோட்டக்கலை, பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, விவசாய இயந்திரங்கள் வாங்குதல் போன்ற விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய காலக் கடன்கள் மற்றும் ஊரகத் தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மானியத்துடன் கடன்

மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோரை, குறிப்பாக இளைஞர்களை வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள் வழங்கப்படுகின்றன. பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், செக்கு எண்ணெய் உற்பத்தி, மாவு வகைகள் தயாரித்தல், மசாலா பொருட்கள், பால் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவு சார்ந்த தொழில்களை தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கு www.pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நாளை (9ம் தேதி) கடன் மேளா கூட்டுறவு வங்கி கிளைகளில் நடக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு 89038 11473 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது tdcc.nfs@gmail.com என்ற இ.மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement