ராகுல் சந்திப்பை தவிர்க்கும் விஜய்; பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பு

9

- நமது நிருபர்-

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாளை மறுதினம் சென்னை வருகிறார். அவர், முதல்வர் விஜயை சந்திக்கும் நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் 11ம் தேதி, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்கிறார். இது காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக, கடந்த மாதம் 30ம் தேதி, டில்லியில் 'இண்டி' கூட்டணி சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் த.வெ.க., தலைமையிலான கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளதால், டில்லி கூட்டத்தில் பங்கேற்க, த.வெ.க.,வுக்கு காங்., தலைமை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், த.வெ.க., அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது. எனினும், த.வெ.க., கூட்டணியில் உள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலிலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை; தனியாகவே பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், வரும் 10ம் தேதி, 'மாணவர்களின் குரல்' என்ற தலைப்பில், கல்லுாரி மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் பங்கேற்க, சென்னைக்கு ராகுல் வருகிறார். முதல்வர் விஜயை சந்திக்க, காங்கிரஸ் தரப்பில் நேரம் கேட்டும், இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை.

'ஜென்சி' எனப்படும் இளம் தலைமுறையினரின் ஓட்டுகளை கவர, 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்கனவே, ஜென்சி ஓட்டுகள், த.வெ.க., பக்கம் உள்ள நிலையில், ராகுலை விஜய் சந்தித்தால், தேசிய அளவில் ஜென்சி ஓட்டுகளை காங்., கவர முடியும்.

இது, பிரதமர் வேட்பாளராக விஜயை முன்னிலைப்படுத்தும் செயலுக்கு பின்னடைவாக அமையும். எனவே, ராகுல் - விஜய் சந்திப்பு நடக்காவிட்டால், தமிழகத்திற்கு ராகுல், வந்து சென்றதே தெரியாமல் போய்விடும் என, த.வெ.க., தரப்பில் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே, ராகுல் - விஜய் சந்திப்பு, தவிர்க்கப்பட்டு வருகிறது; சந்திப்பு, இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரம், வரும் 11ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னைக்கு பிரதமர் மோடி வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்கிறார்.

இதையடுத்து, த.வெ.க., ஆட்சி அமைக்க, ஆதரவு கொடுத்த ராகுலை சந்திக்காமல், பிரதமர் மோடி நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்பது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

@block_B@

கைதுக்கு கண்டனம் இல்லை



தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, 'இண்டி' கூட்டணி கட்சிகள், டில்லியில் நடத்திய போராட்டத்தின்போது, காங்-. எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2025ல் தேர்தல் கமிஷனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில், ராகுல் கைதானபோது, விஜய் கண்டனம் தெரிவித்தார். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கைதுக்கு, கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், விஜய் மவுனம் காக்கிறார்.

'மத்திய அரசுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்; பா.ஜ., எதிர்ப்பு அரசியலை வெளிப்படுத்த வேண்டாம்; வரும் 2029ல் லோக்சபா தேர்தலில், த.வெ.க., மீது காங்., சவாரி செய்ய அனுமதிக்க கூடாது; தனி அடையாளத்துடன் த.வெ.க., இயங்க வேண்டும்', என த.வெ.க., தலைமை முடிவு செய்திருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.block_B

Advertisement