தற்கொலைக்கு துாண்டிய குற்றமாகாது திருமண மறுப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு

--–சிறப்பு நிருபர்–

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தாலோ, காதலை முறித்துக் கொண்டதாலோ, ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதை தற்கொலைக்கு துாண்டிய குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெலுங்கானாவில், காதலர் திருமணம் செய்ய மறுத்ததால், மனம் உடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்கு துாண்டியதாக அந்த பெண்ணின் காதலர், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, வினோத் கே. சந்திரன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

காதல் தோல்வி அல்லது திருமண மறுப்பை தொடர்ந்து, ஒரு தற்கொலை நடந்துவிட்டது என்பதற்காக மட்டுமே, அதை தற்கொலைக்கு துாண்டிய குற்றமாக கருத முடியாது. பெண்ணை தற்கொலைக்கு துாண்டும் எண்ணத்துடன், திருமணம் செய்து கொள்ள மறுத்தார் என்பதற்கு போதிய சட்டப்பூர்வ ஆதாரங்கள் இருக்க வேண்டும். அதே போல், காதல் தோல்வியில் முடிந்து, தற்கொலை நிகழ்ந்தால், அதையும் தற்கொலைக்கு துாண்டிய குற்றமாக கூறிவிட முடியாது.

இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அப்பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டியதற்கான நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை முழுதாக ரத்து செய்ய உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement