பஞ்சாபில் 50 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவு
--–சிறப்பு நிருபர்–
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா, மோகா மாவட்டங்களில் 50 வார்டுகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முறைகேடுகள் நடந்தது உறுதியானதால், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியை சேர்ந்த முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள 28 வார்டுகளிலும், மோகா மாவட்டத்தின் 22 வார்டுகளிலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதற்காக எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவர்களை ஆளுங்கட்சியினர் தடுத்தி நிறுத்தி, வேட்புமனுக்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் உறுதியானது. இதையடுத்து, 50 வார்டுகளிலும் நடந்து முடிந்த தேர்தல் செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம், நீதித்துறை கண்காணிப்பின் கீழ் ஆறு வாரங்களுக்குள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.