சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்

சென்னை: சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.

இமானுவேல் சேகரனார் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.




திமுக தலைவர், ஸ்டாலின்

ஜாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள். இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது திராவிட மாடல் அரசு.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement