இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்

8

சென்னை:

அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், செயற்கைக்கோள் வாயிலாக இணையசேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் அனுமதி வழங்கவில்லை எனப் புகார் கூறி வருகிறார். இதற்கு இந்தியாவில் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலர் எதிர்ப்பு தெரிக்கின்றனர்.

இந்நிலையில் ராஜ்யசபா எம்பி கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எந்தவொரு கோடீஸ்வரரும் அவர் இந்தியராக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்கக்கூடாது.

தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் மலிவான இணைய சேவை அளிக்கும் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் செயற்கைகோள் வாயிலான இணைய சேவையில் வரும் போட்டியை இந்தியா வரவேற்க வேண்டும்.

குறைந்த தனிநபர் வருமானம் உள்ள நாடுகளில் செயற்கைகோள் வாயிலான இணையசேவை மலிவானதாக இருக்க வேண்டும். ஆனால், சந்தாக் கட்டணங்கள் மற்றும் உபகரணச் செலவுகள் அைத சாதாரண குடும்பங்களின் கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

நமது நெட்வொர்க்குகளும், ஸ்பெக்ட்ரம்களும் வெறும் வணிகச் சொத்துகள் அல்ல. அவை உள்கட்டமைப்புகள் என்பதை இந்தியா அறிந்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு எப்போதும் சமரசம் செய்ய முடியாதவை. ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் அடிப்படையில் முடிவு எடுக்கிறது.மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடித்து, தாராள சந்தைகளை பற்றி போதிக்கக்கூடாது.

அமெரிக்காதனது உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க சீன மின்சார வாகனங்கள் மீது 100 சதவீத வரியை விதித்தது. அதேபோல் இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறது. பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இந்தியாவும், அமெரிக்காவும் ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தன. ஒரு நாடு தனது சொந்த திட்டங்களுக்கு ஏற்ப இருக்கும்போது, மற்றவர்களிடம் இருந்து சமமான வாய்ப்பை கோர முடியாது.

ஒரு ஜனநாயக நாடாக நமது பலங்களையும், பலவீனங்களையும் இந்தியர்கள் உள்நாட்டில் விவாதித்து கேள்வி எழுப்பி சரி செய்வார்கள். கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிராட்பேண்ட் சேவை கொண்டு வரும் இந்தியாவின் பாரத்நெட் திட்டத்தை எடுப்போம்.

சிஏஜியின் 2026 தணிக்கை அறிக்கை கண்டறிந்தபடி, இத்திட்டம் அதன் நோக்கத்தை அடைவதில் ஏன் சிரமப்படுகிறது என கேள்வி எழுப்புவோம்.

இணையத் தரவை உலகின் மிகவும் மலிவான ஒன்றாக மாற்றி, லட்சக்கணக்கானோரை இணையத்துடன் இணைத்த நமது தொலைத்தொடர்புத் துறையையும் அதன் விதிமுறைகளையும் நாம் பாராட்ட வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயகம், காலனி நாடு அல்ல. நாம் உலகை வரவேற்கிறோம். ஆனால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம். மேற்கத்திய சுயநலன்களோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ அல்லது எந்தவொரு கோடீஸ்வரரோ -இந்தியராகவோ அமெரிக்கராகவோ அல்ல. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement