இருதரப்பு மோதலில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கடலுார்: கடலுார் அருகே இருதரப்பு மோதலில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் வெங்கடேஷ்,26; இவர், நேற்று தனது நண்பர் தினேஷ் என்பவருடன் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் பைக்கில் வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வைத்தி மகன் விஜயன், டிராக்டர் மீது அமர்ந்து மது அருந்தி விட்டு மதுவை வெங்கடேஷ் மீது ஊற்றியதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.

ஆத்திரமடைந்த விஜயன் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தனது சட்டையை கிழித்து திரியாக பயன்படுத்தி வெங்கடேஷ் மீது வீசினார். ஆனால், அவர் மீது தீ விழவில்லை. அருகில் இருந்த லாரி மீது விழுந்தது. லாரி அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை.

இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து இருதரப்பிலும் சேர்ந்த விஜயன், ரஞ்சித்குமார்,35; வெங்கடேஷ், மணிமாறன் மகன் புஷ்பராஜ்,26; பூபாலன் மகன் ஹரிகரன்,25; நாகராஜ்,22; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement