சேதமடைந்த போடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்: 4 ஆண்டாக கட்டுமான பணி துவங்காத அவலம்

போடி: போடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் சேதமைடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் புதிய ஸ்டேஷன் கட்ட பிளான் அப்ரூவல் வழங்கி நான்கு ஆண்டுகளாகியும் கட்டுமான பணி துவங்காமல் உள்ளது.

போடி ரயில்வே ஸ்டேஷனில் 98 ஆண்டுகளுக்கு முன்பு 1928 ல் 450 ச.அடியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது.

இங்கு தற்போதும் ஒரு எஸ்.ஐ., 6 போலீசார் பணி புரிகின்றனர். போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ரயில்வே பிளாட்பாரம் சோதனை, தண்டவாளங்களில் விபத்துக்களை தவிர்க்க சோதனை மேற்கொள்வதும், ரயிலில் பயணிகள் பாதுகாப்பிற்காக போடியில் இருந்து மதுரை,திண்டுக்கல் வரை தினமும் ஒரு போலீசார் சென்று வருகின்றனர்.

நுாற்றாண்டை நோக்கியுள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்து, தகர கொட்டகையில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் செயல் படுகிறது.

லேசான மழை பெய்தால் கூட மழைநீர் ஸ்டேஷனுக்குள் புகுந்து விடும். இரவில் பாம்புகளிடமாக உள்ளது. சுகாதார வளாகம், ஆவணங்கள் பாதுகாப்பு, லாக்கப் அறை முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே பழைய ஸ்டேஷன் கட்டடத்தை இடித்து விட்டு 1125 ச.அடியில் புதிய ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிகள் துவங்கிட தமிழக ரயில்வே போலீஸ் குடியிருப்பு வாரியம் பிளான் அப்ரூவல் வழங்கி உள்ளது.

பிளான் அப்ரூவலை ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கொடுத்து புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டி தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

போலீசார் ஸ்டேஷனில் இரவு தங்கி பணிபுரியும் வகையில் புதிய கட்டடம் கட்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement