பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
கரூர்;கரூர் அருகே வீட்டின் பூட்டை
உடைத்து, நகை, பணம் மற்றும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம
நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்
மாவட்டம், புகழூர் நான்கு ரோடு அருகே மாரியம்மன் நகரை சேர்ந்தவர்
சம்பத்குமார், 67. இவர், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித
நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆண்டாள், 60.
இவர்கள், சென்னையில் வசித்து வரும் தங்களது மகனை பார்ப்பதற்காகக்
கடந்த, 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள் நேற்று
முன்தினம் ஊர் திரும்பினர். அப்போது, காம்பவுண்ட் கேட்டின் பூட்டும்,
வீட்டு கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ
உடைக்கப்பட்டு அதிலிருந்த, 20,000 ரூபாய், 1 கிராம் தங்க மோதிரம்
ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின்
முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 6 லட்சம் ரூபாய்
மதிப்பிலான ஹூண்டாய் வெனியூ காரையும் மர்ம நபர்கள் திருடி
சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள்,
துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ.,
நந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப
நாய், வீட்டின் பகுதியிலிருந்து சிறிது துாரம் ஓடி நின்றது. கைரேகை
நிபுணர்கள் உடைந்த கேட், பூட்டு மற்றும் பீரோ ஆகியவற்றில்
பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில்
பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
டன.