கத்தி முனையில் பணம் பறித்த நால்வர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள பேக்கரியில் நுழைந்து, நிருபர்கள் எனக்கூறி கத்தி முனையில் பணம் பறித்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஒப்பந்தவாடியை சேர்ந்தவர் அருண்குமார், 27. கிருஷ்ணகிரி, சேலம் பைபாஸ் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த மாதம், 28ம் தேதி மது போதையில் வந்த நால்வர், அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அவரை தாக்கி கடையில் இருந்த, 3,700 ரூபாயை எடுத்துக் கொண்டு, கத்தி முனையில் ஜிபே மூலம், 5,800 ரூபாயை அனுப்பச் சொல்லி சென்றுள்ளனர். இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம். எங்களின் பின்புலம் உனக்கு தெரியாது என, மிரட்டி உள்ளனர். பயந்த அருண்குமார் இது குறித்து வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில், அதே கும்பல் இரு தினங்களுக்கு முன்பு, மீண்டும் பேக்கரி கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் அருண்குமாரிடம், பெண்களை ஆபாசமாக படம் எடுப்பதாக புகார் வந்துள்ளது. நாங்கள் எல்லாம் நிருபர்கள். இதுகுறித்து வெளியே சொன்னால், உன் நிலைமை அவ்வளவு தான். மரியாதையாக, 20,000 ரூபாய் கொடு. இல்லையென்றால் உன்னை பற்றி செய்தி வெளியிடுவோம் எனக்கூறி தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து அருண்குமார் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி, பேக்கரியில் நுழைந்து மிரட்டியது கிருஷ்ணகிரி காந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான், 27, பாரதி நகர் மணிகண்டன், 24, பழையபேட்டை கரண், 26, பெரியமுத்துார் வடிவேலு, 36, என்பது தெரிந்தது. இவர்கள் அனைவரும், நிருபர்கள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. நான்கு பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement