நிலத்தகராறில் முதியவர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே நிலத்தகராறில் முதியவரை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வீரவநல்லூர் அருகே சீனியாபுரத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற துரைப்பாண்டிக்கு 60, விவசாய நிலம் வாங்கியது தொடர்பாக உறவினர்களுடன் முன்விரோதம் ஏற்பட்டது.
2017 செப்., 5 இரவு மணிகண்டன் 37, உதயகாந்த் 29, வேல்துரை என்ற பார்த்திபன் 23, கோபு 40, ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து பழனிக்குமாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். தடுக்க முயன்ற அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
இதுகுறித்து வீரவநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், வீடு புகுந்த குற்றத்துக்கு 9 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
நால்வருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.