தாய்மாமன் தங்க மோதிரம் பெற அலைக்கழிக்கப்படும் பெண்கள்!
சென்னை: 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தில், பிறந்த பச்சிளங்குழந்தைகளை துாக்கி வருமாறு, பிரசவித்த பெண்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கும் வகையில், 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் விஜய், செப்., 28ம் தேதி தொடங்கி வைத்தாலும், ஜூன் 22ம் தேதி முதல் பிறந்த அனைத்து குழந்தைகளும் பயன் பெறுவர் என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 1.07 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட வேண்டும். தினசரி தலா, 100 என்ற எண்ணிக்கையில் மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. இதில், பிரசவித்த பெண்கள், பிறந்த குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: தங்க மோதிரம் பெற, குழந்தைகளை கட்டாயம் துாக்கி வர வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மருத்துவமனைக்கும், எங்களுக்கும், 30 - 40 கி.மீ., துாரம் உள்ளது. இந்த வெயிலில், பஸ்சில் குழந்தையை துாக்கி வந்தாலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு குழந்தைக்கு பால் கொடுக்க கூட வசதி இல்லை.
அதனால், குழந்தைகளுடன் நேரில் வருவதை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்ததற்கான ஆவணங்கள் மற்றும் தகுதியானவர்களின் ஆவணங்களை சமர்ப்பித்தாலே, தங்க மோதிரம் வழங்க வேண்டும். அதற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், 'தங்க மோதிரம் வழங்குவது வீடியோவாக பதிவு செய்யப்படுவதால், குழந்தையையும் துாக்கி வர வேண்டும். சில மாதங்களுக்கு மட்டும் சிரமம் இருக்கும்' என்றனர்.