பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இன்னும் இலவச பஸ் பாஸ் விநியோகம் இல்லை: கேள்வி எழுப்பும் நடத்துனர்கள்
சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கப்படாத நிலையில், விடுமுறை நாட்களில், மாணவர்கள் பயணம் செய்தால், நடத்துனர்கள் அனுமதி மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன் 4ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ.,க்கள், ஜூலையில் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து, இலவசமாக பயணிக்கலாம் என, அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகள் திறந்து மூன்று மாதங்களாகி விட்டன.
ஆனால், மாணவர்களுக்கு இன்னும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி நேரங்களை தவிர, மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், அரசு பஸ்களில் பயணிக்கும் போது, நடத்துனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அனுமதி மறுக்கின்றனர்.
இது குறித்து, மாணவர்கள் சிலர் கூறியதாவது:
பஸ் பாஸ் வைத்திருந்தால், நடத்துனர்கள் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். தற்போது, பள்ளி, கல்லுாரி அடையாள அட்டை மட்டும் காண்பித்து, பயணம் செய்வதால், இரவு 7:00 மணிக்கு மேல் பயணம் செய்தாலோ, விடுமுறை நாட்களில் பயணம் செய்தாலோ, சில நடத்துனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது, பல்வேறு பயிற்சி வகுப்புகள் சென்று வரும், மாணவர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தங்களின் பழைய பஸ் பாஸ் அல்லது அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். புதிய பாஸ் வழங்கும் வரை அனுமதிக்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி மாணவர்களிடம், பஸ் டிக்கெட் கட்டணம் வசூலித்தால், நடத்தனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுதும் 35.50 லட்சம் ‘ஸ்மார்ட் பாஸ்கள்’ விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை