தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்

புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவிருக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்த 25 ஆயிரம் போலீசார், 300 கண்காணிப்பு கேமராக்கள், கைது செய்யப்படுபவரை அடைத்து வைப்பதற்காக மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் இன்று (அக் 10) போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்தனர். போராட்டக்காரர்கள் டில்லிக்குள் நுழைவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர். டில்லியின் முக்கிய எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய பகுதிகளில் 25,000 போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் எல்லைப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறி டில்லிக்குள் நுழைய முயல்பவர்களை தற்காலிகமாகக் காவலில் வைப்பதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் 12 தற்காலிக தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எல்லைகளில் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், மற்றும் முள்வேலிகள் அமைத்து சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் டாண்ட் உட்பட பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 45 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க டில்லி போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கடிதம் எழுதியுள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கரப்பான் பூச்சி கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் டில்லிக்குள் நுழைய முயற்சி செய்யலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள், உளவுத்துறை அமைப்புகள், எல்லைக் கண்காணிப்பு அதிகாரிகள் டில்லி போலீசாருடன், தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தேசிய தலைநகருக்குள் நுழையும் வாகனங்கள் மீதான கண்காணிப்பும் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஜந்தர் மந்தர், தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை அமைந்துள்ள மொத்தம் 1.5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதி, மிகவும் பதற்றமான மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியில் 6,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சமூக ஊடக கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லக்னோ, ஆக்ரா, மீரட், பரேலி, காசியாபாத், நொய்டா, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசியில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement