தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் ஊராட்சியில், தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில நிதிக் குழு மானியத்தில், 2018 –- 19ம் ஆண்டு, 7.96 லட்சம் ரூபாய் செலவில், ஊரக பகுதிகளில் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், களக்காட்டூர் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இதில், ஐந்து ரூபாய் நாணயம் போட்டால், குழாய் வழியாக 20 லி., சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறலாம். இதன் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களாக தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பழுதடைந்துள்ள தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, களக்காட்டூர் ஊராட்சி செயலர் சேகர் கூறுகையில், “தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உதிரிபாகங்கள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், உடனே சரிசெய்ய முடியவில்லை. உதிரிபாகங்கள் கிடைத்ததும் சரிசெய்யப்படும்,” என்றார்.

Advertisement