ஆம் ஆத்மி தலைவர் பரத்வாஜ் மீது அமைச்சர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜ் மீது, டில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தொடர்ந்த குற்றவியல் அவதுாறு வழக்கை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:
மேற்கு டில்லி தனியார் பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், என்னை தொடர்புபடுத்தி, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இது, என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. எனவே, என் மீது அவதூறு பரப்பிய பரத்வாஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த, கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல் பிறப்பித்த உத்தரவு:
இந்த புகார் விசாரணைக்கு ஏற்றதல்ல. சமூக ஊடகத்தில் சவுரவ் பரத்வாஜ் வெளியிட்டுள்ள பதிவில், கேள்விகள் வடிவில்தான் இருக்கின்றன. அவை அவதுாறுக்கு உரியவை அல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டில்லி விகாஸ்புரியில் சாலையை ஆய்வு செய்தபோது, ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர் ஒருவரை, அமைச்சர் பர்வேஷ் வர்மா அறைந்த நாளில் இருந்தே, பரத்வாஜ் மற்றும் வர்மா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.